கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்

சென்னை: தமிழக சட்டப்பேரவையை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்ததால் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிந்தது. உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 3,78,829-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி  16,510 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஆனாலும்,  நோய் தொற்று அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக பல்வேறு மாநிலத்தில் வருகிற 31ம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், வருகிற 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மின்சார ரயில், மெட்ரோ ரயில், வெளியூர் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்த தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதன் படி இன்றுடன் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படும் என சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்தார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் நாகப்பட்டினம் மாவட்டம் 2 ஆக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா நிவாரணங்களை முதல்வர் அறிவித்தார். பின்னர் சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைத்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். முதல்வர் பழனிசாமியுடன் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பல பேர் இருந்தனர்.

Related Stories: