கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைகளை ட்ரோன் மூலம் தூய்மைப்படுத்தும் திட்டம் : சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெள்ளோட்டம்

சென்னை : கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனை வளாகங்களை ட்ரோன் எனப்படும் பறக்கும் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தும் பணிக்கான வெள்ளோட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தியாவில் இதுவரை 8 பேர் பலியாகி உள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 30 மாநிலங்களில் இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ராஜீவ்  காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தை ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தும் வெள்ளோட்டப் பணியை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த முயற்சி வெற்றிபெற்றால், அனைத்து மருத்துவமனைகளையும் ட்ரோன் மூலம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தது 2 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட 10,000 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Stories: