கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு: சட்டப்பேரவையை ஒத்தி வைக்க கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடர் புறக்கணிப்பு

சென்னை: சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 192க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி  வருகிறது. உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,616 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,36,838 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 406 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 7 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சட்டப்பேரவையில் கடந்த 20-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்  ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் உள்ளிட்டோர், “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும். எம்எல்ஏக்கள் தொகுதி பக்கம் சென்று, கொரோனா விழிப்புணர்வு  நடவடிக்கைகளில் ஈடுபட இது வசதியாக இருக்கும்” என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, “சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க அவசியம் இல்லை. பேரவை கூட்டம்  நடத்தினால்தான் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்” என்றார். தொடர்ந்து,  சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு தலைமை செயலகத்தில்  நடந்தது. ஆனால், கூட்டம் முடியும் வரை சட்டப்பேரவை ஒத்திவைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது, சட்டப்பேரவையை ஒத்தி வைக்க கோரி, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகள் பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்து வெளிநடப்பு  செய்தனர். சட்டப்பேரவை புறக்கணித்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக கொறடா சக்கரபாணி, சட்டப்பேரவையை ஒத்திவைக்க  மறுப்பதால் புறக்கணிப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

Related Stories: