பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை: மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதி எம்எம்டிஏ காலனி 4வது பிளாக் 9வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். ராஜஸ்தானை சேர்ந்த இவர், மனைவி மற்றும் 10 வயது மகளுடன் இங்கு தங்கி பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறுமி 5ம் வகுப்பு படித்து வந்தாள்.

இவர்கள், வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருந்துள்ளனர். கடந்த 20ம் தேதி இரவு சிறுமி இயற்கை உபாதையை கழிக்க வீட்டிற்கு வெளியே இருந்த கழிப்பறைக்கு சென்றாள். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் பெற்றோர் சிறுமியை வெளியே வந்து தேடியுள்ளனர்.

அப்போது, வீட்டின் பின்பகுதியில் உள்ள காலி இடத்தில் சிறுமி படுகாயங்களுடன் உயிருக்குப் போராடியது தெரியவந்தது. அவளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீசார் விசாரணையில், அந்த குடியிருப்பின் 2வது தளத்தில் வாடகைக்கு குடியிருந்த திண்டிவனத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சுரேஷ் (29) போதையில், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததும், இதில் மயக்கமடைந்த சிறுமியை 3வது தளமான மொட்டை மாடிக்கு தூக்கி சென்று, வீட்டின் பின்புறம் உள்ள காலி மனையில் தூக்கி எறிந்து கொலை செய்ததும் தெரிந்தது. அவரை கைது செய்தனர். இதற்கிடையே நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சுரேஷ் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>