கொரோனா பாதிப்பு எதிரொலி: தமிழக சட்டப்பேரவை கூட்டம் 31ம் தேதியுடன் முடிகிறது: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே வருகிற 31ம் தேதியுடன் முடிவடையும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முன் கூட்டியே முடிக்க வேண்டும் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் நேற்று பிற்பகல் 12 மணிக்கு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் மீண்டும் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 31ம் தேதியுடன் முடிக்கப்படும் என்று பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிய வேண்டிய பேரவைக் கூட்டம் 9 நாட்கள் முன்னதாக மார்ச் 31ம் தேதியுடன் முடிக்கப்படுகிறது. இதன்படி காலை, மாலை என்று இரண்டு பிரிவாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.

பேரவை நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கும் கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 23ம் தேதி(நாளை) 2019-2020ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து விவாதமின்றி துணை நிதி நிலை அறிக்கை நிறைவேற்றப்படும்.  அதன் பிறகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை, செய்தி மற்றும் விளம்பரம் துறை, எழுதுபொருள் மற்றும் அச்சு துறை மானியக்கோரிக்கை நடைபெறுகிறது. 24ம் தேதி காலையில் தொழில் துறை, குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பிற்பகல் வணிகவரி மற்றும் பதிவுத்துறை, பால்வளம்.  25ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு அரசு விடுமுறை. 26ம் தேதி காலை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, பிற்பகல் போக்குவரத்து துறை. 27ம் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை, பிற்பகல் சுற்றுலா, இந்து சமய அறநிலையத்துறை, 28ம் தேதி காலையில் வேளாண்மை துறை, பிற்பகல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கைத்தறி துறை. 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 30ம் தேதி காலை தகவல் தொழில்நுட்பவியல், வருவாய்துறை, பிற்பகல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை, தமிழ் வளர்ச்சி துறை.31ம் தேதி காலை ெபாதுத்துறை, நிதித்துறை, வீட்டுவசதி துறை மானியக்கோரிக்கையும் நடைபெறுகிறது.

Related Stories: