கீழடி அருகே கொந்தகை அகழாய்வில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு: ஆஸ்திரேலியா, அமெரிக்காவுடன் இணைந்து மரபணு சோதனை நடத்த முடிவு

திருப்புவனம்: கொந்தகை அகழாய்வு தளத்தில் மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்.19ம் தேதி அகரம், கொந்தகை, கீழடியில் துவங்கியது. கொந்தகையில் சுரேஷ் என்பவரின் நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு நடந்த அகழாய்வில் 4 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. பண்டை காலத்தில் இறந்தவர்களை மட்டுமின்றி, பராமரிக்க முடியாத முதியவர்களையும் பெரிய பானைகளுக்குள் உணவு, தண்ணீர் வைத்து புதைப்பதும் வழக்கத்தில் இருந்துள்ளது. கொந்தகையில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் இதுவரை எந்த வகையை சேர்ந்தது என கண்டறிய முடியவில்லை. எனவே தமிழக தொல்லியல் துறையினருடன் மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணு பிரிவும் இணைந்து இதை கண்டுபிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி  மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், பேராசிரியர் பாலகிருஷ்ணன் (உயிரியல் பிரிவு), புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன் உள்ளிட்டோர் நேற்று காலை முதல் கொந்தகையில் ஆய்வு மேற்கொண்டனர்.   அப்போது அமர்ந்த நிலையில் ஒரு பானையினுள் மனித எலும்புக்கூடு கால்கள் மட்டும் நீட்டிய நிலையில் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், ‘‘கொந்தகையில் கிடைத்த எலும்புக்கூடுவின் மரபணுவை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு செய்ய உள்ளோம். முதுமக்கள் தாழியில் கை, கால் நீட்டிய நிலையில் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மேற்பகுதியில் சட்டி போன்ற பானைகளும் கண்டறியப்பட்டுள்ளன’’ என்றார்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘கொந்தகையில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலம் முதுமக்கள் புதைக்கப்பட்ட இடமாக கருதப்படுகிறது. டிஎன்ஏ பரிசோதனை, கார்பன் டேட்டிங் பரிசோதனை முடிவில்தான் முழுமையான தகவல்கள் வெளிவரும். ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை விட கொந்தகை தாழிகள் மிகவும் முன்னோக்கிய காலம் என தெரிகிறது’’ என்றனர்.

Related Stories: