தமிழகத்துக்கு ரூ.987.85 கோடி: கொரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு

டெல்லி: கொரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 186 நாடுகளில் வேகமாக பரவி மக்களை கொல்லும் பெரும் கொள்ளை நோயாக மாறியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இத்தகைய வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று 298 உறுதியாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 4  பேர் உயிரிழந்த நிலையில் மத்திய, மாநில அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பெரிய பெரிய திரையரங்குகள், மால்கள் , நட்சத்திர விடுதிகள் , சுற்றுலா தளம் என மக்கள் கூட கூடிய அனைத்துக்கும் தடை விதித்துள்ள மத்திய அரசு, நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்துக்கு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர் பகுதிகளுக்கு ரூ.1,629 கோடி, ஊரக பகுதிகளுக்கு ரூ.940 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா - ரூ,301 கோடி, ஒடிசா- ரூ.186 கோடி, அருணாச்சலப்பிரதேசத்துக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: