துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த 155 பேருக்கு சிறப்பு முகாம்களில் கொரோனா பரிசோதனை தீவிரம்!

அவனியாபுரம் :  துபாயிலிருந்து விமானம் மூலம் வந்த 155 பயணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா என சோதனை செய்ய மதுரையில் உள்ள  சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில்  சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதித்து, அவர்களுக்கு கொரோனா தொற்று  உள்ளதா என சோதிக்க, மதுரை மாவட்டத்தில் சின்னஉடைப்பு கிராமத்தில் இருக்கும் அரசு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கல்லூரி,  ஆஸ்டின்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சிறப்பு பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. துபாயிலிருந்து மதுரைக்கு 136 ஆண்கள், 13  பெண்கள், 6 குழந்தைகள் என 155 பயணிகள் விமானம் மூலம்  நேற்று வந்தனர்.

இவர்களுக்கு சுகாதார பரிசோதனையை கூடுதல் இயக்குநர் பிரியாராஜ், மருத்துவர்கள் சிவகுமார், பாலமுருகன், கபீர் மற்றும் வட்டார மருத்துவ  கண்காணிப்பாளர் தங்கசாமி ஆகியோர் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் செய்தனர். பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை நடைபெறுவதை  பார்வையிட்ட மதுரை மாவட்ட கலெக்டர் வினய், ‘தனிமை முகாம் செல்ல சம்மதிக்கிறேன்’ என்று உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து பெற்ற  பின்னரே, முகாம்களுக்கு செல்ல பயணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து 155 பயணிகள் அரசு ஏற்பாடு செய்த  பஸ்கள் மூலம் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக நேற்று முன்தினம் வந்த 144 பயணிகள் முகாமிலிருந்து அவர்களது  வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘வீட்டில் தனிமையில் இருப்போம். வெளியில் செல்ல மாட்டோம்’ என்று உறுதிமொழி  வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், துபாய் விமான சேவை இன்று முதல் (மார்ச் 21) முதல் மார்ச் 28ம் தேதி வரை ரத்து  செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: