பயணிகள் மத்தியில் கொரோனா பீதி 2 ஆயிரம் அரசு பஸ்கள் குறைப்பு: போக்குவரத்துத்துறை நடவடிக்கை

சென்னை: கொரோனா பீதி காரணமாக பொதுமக்கள் பயணம் செய்ய விரும்பாததால், 2000 அரசு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்திலும் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வெளியில் வருவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என அரசு கூறியுள்ளது. இதனால் தற்ேபாது, குறைந்தளவு பயணிகளே அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர்.  சென்னையில் உள்ள முக்கிய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையங்களில் குறைவான அளவு பயணிகளே காணப்படுகின்றனர். வழக்கமாக தினந்தோறும் 3,200 மாநகர பஸ்கள் இயக்கப்படும். தற்போது இதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா பீதி காரணமாக பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுவதாக இருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநகர பஸ்களில் ஓரளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது. தற்போது அதுவும் குறைந்துள்ளது.சென்னையில் நாள்தோறும் 3,200 மாநகர பஸ்கள் இயக்கப்படும். இது தற்போது 2,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் 19,000 பஸ்கள் தினந்தோறும் இயக்கப்படும்.

இது 17,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது சனிக்கிழமையில் பின்பற்றப்படும் காலஅட்டவணைப்படி பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து பயணிகள் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி பஸ்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அப்போது பஸ்களின் எண்ணிக்கை மேலும் குறைத்து இயக்கப்படும். பயணம் செய்வோருக்கு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: