மத்தியப் பிரதேசத்தில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘மத்தியப் பிரதேசத்தில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும்,’ என இம்மாநில சபாநாயகர் பிரஜாபதிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில காங்கிரசில் பலம் வாய்ந்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்யா சிந்தியா, கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக சமீபத்தில் விலகினார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜ.வில் இணைந்தார். இவருடன் காங்கிரசை சேர்ந்த 22 அதிருப்தி எம்எல்ஏ.க்களும் பதவி விலகினர். இதற்கான ராஜினாமா கடிதத்தை மத்திய பிரதேச சபாநாயகர் பிரஜாபதிக்கு அனுப்பினார். இவர்களில் 6 பேரின் ராஜினாமாவை மட்டுமே அவர் ஏற்றுள்ளார். இந்த 22 பேரும் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில், இம்மாநில பாஜ முதல்வர் எடியூரப்பாவின் பாதுகாப்பில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், 22 எம்எல்ஏ.க்களின் ராஜினாமாவை தொடர்ந்து, காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் இருமுறை உத்தரவிட்டார். ஆனால், பாஜ பிடியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் விடுவிக்கப்படாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சாத்தியமில்லை என கமல்நாத் கூறி விட்டார். ஆளுநர் உத்தரவுப்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக கூட்டப்பட்ட ஒருநாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தையும், கொரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி சபாநாயகர் மார்ச் இறுதி வரை ஒத்திவைத்து விட்டார்.

இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி சபாநாயகருக்கும், முதல்வர் கமல்நாத்துக்கும் உத்தர விடக்கோரி மத்திய பிரதேச முன்னாள் பாஜ முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீதான விசாரணை, நீதிபதிகள் சந்திராசூட், ஹேமந்த் குப்தா அமர்வில் நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘அதிருப்தி எம்எல்ஏ.க்களுடன், காணொளி காட்சி மூலம் சபாநாயகர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் அல்லது பெங்களூரில் கண்காணிப்பாளர் ஒருவரை நியமித்து, அதிருப்தி  எம்எல்ஏ.க்களை உங்களுடன் தொடர்பு கொள்ள வைக்கலாம்,’’ என்று ஆலோசனை கூறினார். இதற்கு சபாநாயகர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மானு சிங்வி, ‘‘சபாநாயகருக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள், அரசியல் சாசனப்படி சிக்கலானதாக இருக்கும்,’’ என்றார்.  ஆளுநர் லால்ஜி டாண்டன் சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘‘முதல்வர் ஒரு ஓரமாக உட்கார்ந்துள்ளார். சபாநாயகர்தான் நீதிமன்றத்தில் அரசியல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்,’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மத்தியப் பிரதேச சபாநாயகர் பிரஜாபதி, நாளை (இன்று) சட்டப்பேரவையை கூட்டி மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் (22 பேர்) இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்பினால், அவர்களுக்கு மபி, கர்நாடக போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே நடைபெற வேண்டும்’’ என்று தெரிவித்தனர். இந்த உத்தரவை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 22 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத பட்சத்தில், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் கமல்நாத் அரசுக்கு பெரும்பான்மை கிடைப்பது மிகவும் கடினம். வாக்கெடுப்பில் அது தோற்று, ஆட்சியை இழக்கும் நிலை உள்ளது.

Related Stories: