சூப்பர் மார்க்கெட், பெரிய ஜவுளி கடை, நகை கடை, வாரச்சந்தைகளை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு: தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய ஜவுளி மற்றும் நகைக் கடைகள், வாரச் சந்தைகளை மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பெரிய வணிக நிறுவனங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் முடிவில் தமிழகம் முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட், பெரிய ஜவுளி, நகை கடைகளை, வாரச் சந்தைகளை மார்ச் 31ம் தேதி மூட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை : அனைத்து மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கான படுக்கை வசதி உட்பட அனைத்து வசதிகளையும் கொண்ட சிறப்பு மருத்துவமனைகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுடன், சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் காணொலிக் காட்சி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவ அறிவுரைகளை தொடர்ந்து வழங்க வேண்டும்  தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்புக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள், கையுரைகள், காலணிகள் ஆகியவை போதிய அளவில் வழங்கப்பட வேண்டும்.  

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், மக்கள் கூடும் இடங்களில் நாள் ஒன்றுக்கு 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும். வாரச் சந்தைகள் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மூடப்பட வேண்டும். மக்கள் மிக அதிகமாகக் கூடக்கூடிய நீதிமன்றங்கள், விமான நிலையம், ரயில்வே நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் நாள் ஒன்றுக்கு மூன்று முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும். ஐடி

நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில் நோய் தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக, இந்நிறுவனங்களில் உள்ள உணவகங்களை மிகவும் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.  மேலும், பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் ஏற்கனவே, வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது மக்கள் அதிகம் செல்லக்கூடிய ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி கொண்ட பெரிய ஜவுளிக் கடைகள், பெரிய நகைக் கடைகள், பல்வகை பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய கடைகள் போன்றவற்றில் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால், இவை இன்று முதல் மூடப்படும்.  எனினும், நகைக் கடை போன்றவற்றில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டர்படி பொருட்களை பெற்றுச் செல்ல மட்டும் ஒரு தனி வழியை பயன்படுத்தலாம்.   அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய் கனிக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும்.

அதிக மக்கள் வரக்கூடிய மிகப் பெரிய கோயில்களில் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இதைப்போன்று, அதிக மக்கள் வரக்கூடிய பெரிய தேவாலயங்கள் மற்றும் மசூதிகள், தர்காக்களில் 31ம் தேதி வரை பொது மக்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பேசி தகுந்த அறிவுரை வழங்கி, அதனை கடைபிடிக்க கேட்டுக் கொள்ள வேண்டும்.  

மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.  அதே போல், பிற மாநிலங்களில் இருந்து வரும் ரயில் போக்குவரத்தையும் கணிசமாகக் குறைக்க தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ரயில் மற்றும் சாலை மார்க்கமாக வரும் பயணிகளை தீவிரமாக சோதனை செய்யவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தனிமைப்படுத்தப்பட வேண்டிய பயணிகளை அழைத்துச் செல்வதற்கென விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சிறப்பு வாகன ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டது.  அத்தகைய வாகனங்களை கிருமிநாசினி மூலம் அடிக்கடி தூய்மைப்படுத்தியும், அதன் ஓட்டுநர்கள் முழு பாதுகாப்புடன் வாகனங்களை இயக்குவதற்கான வசதிகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கிருமிநாசினி தெளிப்பான்கள் மற்றும் பிற உபகரணங்கள் தேவையான அளவு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: