நகரங்கள் அனைத்தையும் மூடுவதாக பிரதமர் மோடி அறிவிக்காவிட்டால் மிகுந்த ஏமாற்றம் அடைவேன்: ப.சிதம்பரம் ட்வீட்

சென்னை: நகரங்கள் அனைத்தையும் மூடுவதாக பிரதமர் மோடி அறிவிக்காவிட்டால் மிகுந்த ஏமாற்றம் அடைவேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சீனாவில் கொலை வெறி ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. கொரோன வைரஸால் இதுவரை 8,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை கொரோனா வைரசுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். 173 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என பிரதமர் அலுவலக ட்விட்டரில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சினை மற்றும் அதனை எதிர்த்து மேற்கொண்டு வரும் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அவர் நாட்டு மக்களிடம் விரிவாக பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் உரையாற்றப்போவது குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் என்ன அறிவிப்பார்? டவுன்கள் மற்றும் நகரங்களை குறைந்தபட்சம் 2 முதல் 4 வாரங்களுக்கு மொத்தமாக மூடப்படும் அறிவிப்பை பிரதமர் வெளியிடவில்லை என்றால் நான் ஏமாற்றமடைவேன். இதை தவிர்த்த எந்த நடவடிக்கையும் இந்த நாட்டை வீழ்த்திவிடும், என்று கூறியுள்ளார்.

Related Stories: