போலியான பி.எச்.டி சான்றிதழ்கள் அளித்து முறைகேடாக பணியில் சேர்ந்த 450 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு!

சென்னை: போலியான பிஎச்.டி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்த மோசடி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்திருக்கிறது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிவரக்கூடிய பேராசிரியர்களில் பெரும்பாலானோர்கள் போலியான கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகார்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரு கடிதம் ஒன்றினை அனுப்பியது. அதாவது அனைத்து கல்லூரிகளும் தங்களுடைய கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்களின் கல்வி தகுதி, சான்றிதழின் உண்மை தன்மை உள்ளிட்டவற்றை ஆராய வேண்டும் என்றும், அதற்கு மார்ச் 16 தேதி வரை நேரம் அளித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் மார்ச் 16ம் தேதி வரை அனைத்து கல்லூரிகளிலும் ஆய்வு செய்ததில் 450க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போலியான பி.எச்.டி. பட்டங்கள் அளித்து பணியில் சேர்ந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்த தகவல் வெளிவந்ததின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கியிருக்கிறது. இதன் முதல்கட்டமாக 450 பேராசிரியர்கள் பணியாற்றும் கல்லூரியின் முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த பேராசிரியர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், மேலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அந்தந்த கல்லூரிகள் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி பேராசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கும் போது அவர்கள் சான்றிதழின் உண்மை தன்மையை சரிபார்க்காமல் வேலைக்கு சேர்த்த கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருக்கிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: