கொரோனா தொற்று அபாயம்..: பரபரப்பாக இயங்கும் சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு..கிருமி நாசினிகள் தெளிப்பு!

சென்னை: கொரோனா தொற்று அபாயம் காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கு அடைக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. கொரோனா வைரசுக்கு 7500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 25 வெளிநாட்டினர் உள்பட 147 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு பயண கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பிரதான வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் ஆகியவைகள் மட்டும் திறந்திருந்தன. இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் வேலுமணியுடன் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின்னர், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகரில் தெருவில் உள்ள அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.

அரசின் அறிவுரையின் பேரில் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை தி.நகரில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் அதன் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் கிருமி நாசினிகளை தெளித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கவே கடைகள் மற்றும் மால்களை மூட முன்னெச்சரிக்கையாக உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக எல்லைகளில் 24 மணி நேரமும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா பற்றி தேவையற்ற அச்சம் வேண்டாம்; எனினும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும், என கூறியுள்ளார்.

Related Stories: