கொரோனா பீதியால் வெறிச்சோடிய குற்றாலம்: சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு ரத்து

தென்காசி: குற்றாலத்தில் கோடை காலமான மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அத்துடன் அருவிகளில் தண்ணீர் வரத்து நின்றுவிடும். இதனால் கோடை காலங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே காணப்படும். ஒரு சில சமயம் கோடை மழை பெய்யும் போது அடுத்த ஒன்றிரண்டு தினங்களுக்கு அருவிகளில் தண்ணீர் விழும். அந்த இரண்டு தினங்கள் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது மெயினருவியில் ஆண்கள் பகுதியில் பாறையை ஓட்டினாற் போன்று சிறிதளவு மட்டும் தண்ணீர் கசிகிறது.

ஐந்தருவியிலும் இதேபோன்று சிறிதளவு தண்ணீர் ஒரே ஒரு பிரிவில் மட்டும் கசிகிறது. புலியருவி, பழைய குற்றால அருவிகள் வறண்டு விட்டன. கோடை காலமாக இருந்தாலும் வழக்கமாக கேரளாவிலிருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவியை பார்வையிட்டு செல்வது வழக்கம். அவ்வாறு வருகின்றவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குடை மற்றும் தலையில் துண்டுகளை அணிந்த நிலையில் அருவிகளை பார்வையிடுவார்கள். ஆனால் தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தருகின்ற வாகனங்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை குற்றாலத்தில் இல்லை. இதனால் மெயின்அருவி பகுதி ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories: