கொரோனா எதிரொலி: டெல்லியில் 50 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூட தடை..சிறிய கை கழுவும் நிலையங்களை அமைக்க முதல்வர் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் எதிரொலியாக டெல்லியில் 50 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு மார்ச் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இதுவரை 116 பேர் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. பொதுமக்கள் எங்கு சென்றாலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் அனைத்தும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. சில இடங்களில், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையி்ல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், டெல்லியில் உடற்பயிற்சி கூடங்கள், இரவு விடுதிகள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவற்றை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், எந்தவித மத, சமூக, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் என 50 பேருக்கு மேல் ஒன்றாக கூடுவதற்கு மார்ச் 31ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடையானது போராட்டங்கள் நடத்துவதற்கும் பொருந்தும். எனினும், திருமணங்கள் நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஆனால், திருமண வைபவங்களையும் தள்ளிப்போட முடியுமானால் அவ்வாறு செய்யுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிறிய கை கழுவும் நிலையங்களை அமைக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் கொரோனா பரவுவதற்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: