மத்திய பிரதேச சட்டப்பேரையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல்!

புதுடெல்லி: மத்திய பிரதேச சட்டப்பேரையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. மத்தியப்பிரதேச காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனால், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேரும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கும், சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பியதோடு பெங்களூருவில் முகாமிட்டனர். இவர்களில் 6 அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை மட்டும் ஏற்றுக்கொண்ட சபாநாயகர், ஏனைய 16 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை.

இத்தகைய காரணங்களால், மத்தியப் பிரதேசத்தில் ஆளும் கமல்நாத் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும் சூழலில், இன்று பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கமல்நாத்திற்கு மத்திய பிரதேச ஆளுநர் உத்தரவிட்டார். இந்நிலையில், வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. அப்போது உரையாற்றிய ஆளுநர் லால்ஜி டாண்டன், அனைவரும் அரசியலமைப்பின் கீழ் விதிகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் மத்தியப் பிரதேசம் கண்ணியம் பாதுகாக்கப்படும் என்று உரையாற்றினார். ஆனால், சட்டமன்ற நடவடிக்கைகள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆளுநர் லால்ஜி டாண்டன் பேரவையில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து மத்திய பிரதேச சட்டப்பேரவை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனால், அன்றைய தினம் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது எனத்தெரிகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய பிரதேச பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 9 பாஜக எம்எல்ஏக்கள் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். சட்டப்பேரவையை 26ம் தேதி வரை ஒத்திவைத்துள்ள சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 48 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவானது நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: