கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் கடந்த வாரம் 12ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு அதிகப்படியாக கைகளை கழுவ வேண்டும் என்று அரசுகளும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள். இதன் அடிப்படையில் மக்கள் கைகளை கழுவுவதற்கு தேவையான நீரை வழங்க வேண்டும். மேலும் சென்னையில் வசிக்கக்கூடிய 1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. ஆதலால் கொரோனா பாதிப்பு நீங்கும் வரைக்கும் தினமும் 3 மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்ய குடிநீர் வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்.

அதுமட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவியருக்கு கைகளை சுத்தப்படுத்தக்கூடிய ஹாண்ட் வாஷ் உள்ளிட்டவைகளை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் தரப்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் மக்கள் அதிகமாக கூடுகின்ற, அதேபோல சுகாதாரமில்லாத டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அதிகப்படியான மக்கள் டாஸ்மாக் வந்துசெல்வதால் அங்கிருந்து கொரோனா பரவி அவரது குடும்பத்தினரும், சுற்றுப்புறத்தில் இருப்பவர்களும் பாதிப்படைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளையும் காலவரையற்று மூட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதேபோல கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அந்த தொகையை 10 லட்சமாக உயர்த்தி அளிப்பதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். அப்போது நீதிபதிகள், கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், கைகளை கழுவுவதற்கு போதுமான தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தொடரப்பட்ட இரண்டு மனுக்கள் மீது, தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கினை ஒத்தி வைத்துள்ளனர்.

Related Stories: