மீட்டர்கேஜ் காலத்தில் இருந்ததை விட குறைவு: நெல்லை - செங்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?: வெளி நகரங்களுக்கு ரயில் நீட்டிப்பு அதிகரிப்பு

நெல்லை:  நெல்லை- செங்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். வெளிநகரங்களுக்கு ரயில்கள் நீட்டிக்கப்படுவதால் நெல்லை ரயில் நிலையத்தின் அந்தஸ்து குறைந்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் தென்பகுதியின் கடைசி ரயில் நிலையமாக இயங்கிய நெல்லை ரயில் நிலையம் பல்வேறு ரயில்களை இங்கிருந்து இயக்கியது. 1993ம் ஆண்டுக்கு பின்னர் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு அகல பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட பல ரயில்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

தற்போது நெல்லை வழியாக அதிக ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், இந்த ரயில்களில் நெல்லை மாவட்ட பயணிகளுக்கு முழுமையாக இருக்கைகள் கிடைப்பதில்லை. இதனால் இங்குள்ள பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இது மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாகவே நெல்லையை மையமாக கொண்டு புதிய ரயில்கள் இயக்காத காரணத்தால் நெல்லை ரயில் நிலையம் பொலிவிழந்து காணப்படுகிறது. நெல்லையிலிருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்கள் மட்டுமே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்களாக இயக்கப்படுகின்றன. நெல்லையிலிருந்து இயக்கப்பட்ட அந்தியோதயா ரயில் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்கும், திருச்சி இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரத்துக்கும் நீட்டிக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள ரயில்கள் வாராந்திர ரயில்களாவோ அல்லது வாரத்துக்கு 2 அல்லது 3 நாள் ரயில்களாக நெல்லையில் இருந்து இயக்கப்படுகின்றன. நெல்லையை அடுத்துள்ள நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் தினசரி ரயில்கள் ஐந்தை தாண்டி காணப்படுகிறது.

நெல்லையில் இருந்து பிரிந்த தூத்துக்குடியில் கூட தினசரி 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. முத்துநகர், மைசூர், குருவாயூர்- தூத்துக்குடி - சென்னை இணைப்பு ரயில், கோவை என 4 எக்ஸ்பிரஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நெல்லை ரயில் நிலையத்திற்கென ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நெல்லை மாவட்டத்தின் ரயில் வழித்தடங்கள் மதுரை மற்றும் திருவனந்தபுரம் என இரண்டு கோட்டங்களின் கீழ் வருகிறது. இரு கோட்டங்களுமே ரயில்களை தங்கள் பகுதிக்கு நீட்டிப்பதிலே அதிக அக்கறை காட்டுகின்றன. அதிலும் நெல்லை- செங்கோட்டை வழித்தடம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் மீட்டர் கேஜ் வழித்தடத்தில் ஓடிய ரயில்கள் ஏராளம்.

இந்த வழித்தடத்தில் தற்போது நான்கு பயணிகள் ரயில்கள் மற்றும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இப்போது இயக்கப்படுகிறது. 500 கி.மீக்கு மேல் பயணம் செய்யும் ஒரு நெடுந்தூர எக்ஸ்பிரஸ் ரயில் கூட இயக்கப்படவில்லை. செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் வழித்தடத்திலும் போதிய ரயில்கள் இல்லை. பொதிகை காலம், காலமாக இயக்கப்படும் நிலையில், கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ், சிலம்பு வாரம் மும்முறை ரயில்கள் மட்டுமே தற்போது கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன.

நெல்லை, ெதன்காசி மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில், நெல்லை- அம்பை- தென்காசி- மதுரை- சென்னை ரயில்கள் இயக்கம் இன்னமும் முற்றிலுமாக செயல்பாட்டுக்கு வரவில்லை. ஒரு சிறப்பு வாராந்திர ரயிலை சில மாதங்கள் இயக்கிவிட்டு, அதையும் தற்போது நிறுத்தி விட்டனர்.

எனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களை மையமாக கொண்டு கூடுதல் ரயில்களை இயக்குவது அவசியம் என பயணிகள் விரும்புகின்றனர். குறிப்பாக செங்கோட்டையில் இருந்து தென்காசி, அம்பை வழியாக நெல்லை வந்து, அங்கிருந்து மணியாச்சி, விருதுநகர் வழியாக சென்னைக்கு ஒரு ரயில் இயக்கப்பட வேண்டும். இந்த ரயிலில் அம்பை- நெல்லை பகுதி பயணிகளுக்கு கூடுதலாக சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு கொல்லத்திலிருந்து செங்கோட்டை, அம்பை, நெல்லை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும், ரயில்வேத்துறை இந்த சிறப்பு ரயிலை ராஜபாளையம் வழியாக மீண்டும் வழித்தடத்தை மாற்றி இயக்கியது.

எனவே பழைய வழித்தடத்திலேயே வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்கப்பட்டால் நெல்லை- தென்காசி மார்க்க பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும். மீட்டர்கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட நெல்ைல- விருதுநகர் ரயில், நெல்லை- கொல்லம் ரயில்களும் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் விருப்பமாகும். நெல்லையில் இருந்து இன்டர்சிட்டி, அந்தியோதயா ஆகிய இரு ரயில்கள் திருவனந்தபுரம் கோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அதற்கு பதிலாக திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர் இயக்கப்பட்டு வரும் மூன்று தினசரி ரயில்களில் ஒரு ரயிலை நாகர்கோவில் வழியாக நெல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகள் மத்தியில் உள்ளது. நெல்லை ரயில் நிலையத்திற்கு மீட்டர்கேஜ் காலத்தில் இருந்த அந்தஸ்தை மீண்டும் கொண்டு

வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் காணப்படுகிறது.

Related Stories: