சட்டசபை கூட்டம் நடைபெறும் நாட்களில் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை

* காலை 9.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும்

* உயரதிகாரிகள் அறிவுரை

சென்னை: சட்டசபை கூட்டம் நடைபெறும் நாட்களிலும் பொதுப்பணி, நெடுஞ்சாலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைகளின் மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தின் போது துறை சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகிறது. மேலும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சார்பிலும் துறை ரீதியான கேள்விகள் எழுப்பபடுகிறது. எனவே, அனைத்து அதிகாரிகளும் சட்டசபை நடைபெறும் நாட்களில் பணியில் இருக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து  அனைத்து செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூடுதல் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர், அந்தந்த துறைகளை சேர்ந்த செயலாளர்கள் ஆபிசர் ேகலரியில் இருக்க வேண்டும். அவர்கள் கேள்வி நேரத்தின் போது அவையில் இருக்க வேண்டும். மேலும், நேரமில்லா நேரம், துறை ரீதியான மானியக்கோரிக்கையில் துறையின் முதன்மை அதிகாரிகள் ஆபிசர் ேகலரியில் இருக்க வேண்டும்.

அனைத்து செயலாளர்கள் மற்றும் துறைகளின் முதன்மை அதிகாரிகள் சட்டசபை நடைபெறும் அனைத்து நாட்களும், அனைத்து நேரங்களும் பணியில் இருக்க வேண்டும்.  முதல்வர் அலுவலகத்தில் சட்டசபை நிகழ்வுகள் குறித்து தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். இந்நிலையில், அனைத்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சட்டமன்ற பேரவையில் 2020-2021ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை தொடர்பான கூட்டம் நடக்கிறது. இதை முன்னிட்டு அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அலுவலகத்துக்கு காலை 9.30 மணிக்கு தவறாமல் வருகை புரிய வேண்டும். மேலும், தங்கள் கீழுள்ள சார்நிலை அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் காலை 9.30 மணிக்கு தவறாமல் வருகை புரிய வேண்டும் என்று அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ள பணிக்கப்பட்டுள்ளேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: