கொரோனா பீதி பரவி வரும் நிலையில் தமிழகத்தில் வேகமாக பரவுகிறது பறவை, பன்றிக்காய்ச்சல் நோய்: வதந்தியால் மருத்துவ பொருட்களுக்கு தேவை அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பீதி ஏற்பட்டுள்ள நிலையில், பன்றி காய்ச்சல் மற்றும் பறவை காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் வேகமாக  பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கொரோனா காய்ச்சலாக இருக்கும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் மருத்துவமனைக்கு  படையெடுத்து வருகின்றனர். இந்த பீதியால் வீட்டில் பொருட்களை வாங்கி சேமிக்கத் தொடங்கியதால், பல கடைகளில் பொருட்கள் விற்று  தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் மற்ற  நாடுகளில் இந்த ைவரஸ் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக இத்தாலி, ஈரான், அமெரிக்கா, தென்கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட  நாடுகளில் நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதைப்போன்று இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது  நாடு முழுவதும் 81 பேர் இந்த வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடகம் மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் இந்த வைரசுக்கு பலியாகி  இருப்பது மக்கள் இடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உபி, பீகார், ஒடிசா, பஞ்சாப், அரியானா,  கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர், மால்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பல மாநிலங்களில்  இயல்புநிலை முடங்கி உள்ளன. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் பொதுமக்கள்  கூடும் விழாக்கள் அனைத்தும் ஒருவாரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சுகாதாரத்துறையை சேர்ந்த அனைத்து  டாக்டர்கள், ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் விடுமுறையை ரத்து செய்து விட்டு உடனடியாக பணிக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில்  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மற்றும் மால்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சபரிமலைக்கு பக்தர்கள் வர  வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு கொரோனா வைரஸ்  பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்  காஞ்சிபுரத்தை சேர்ந்த அவர் குணமடைந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையத்திற்கு வருபவர்கள்  தொடர்ந்து சோதனை செய்யப்படுகின்றனர். இதன்படி சென்னை, மதுரை, திருச்சி, ேகாவை விமான நிலையத்திற்கு வந்த 1,61,240 பயணிகளுக்கு  சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 1406 பயணிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  இதுவரை, 74 பேரிடம் ரத்த பரிசோதனைமேற்கொள்ளப்பட்டு, 73 பேருக்கு பாதிப்பில்லை என, தெரிய வந்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு புறம் இருக்க தமிழகத்தில் பறவை மற்றும் பன்றி  உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இந்த வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு  வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ள்ளதாக எண்ணி தனியார் மற்றும் அரசு  மருத்துவமனைகளுக்கு படையெடுத்துவருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் ெபாதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதைப்போன்று பன்றி காய்ச்சலும் அதிகமாக பரவி வருகிறது. “எச் 1 என்1 எனப்படும் “இன்புளுயன்சா” வைரஸ் கிருமிகளால் இந்த காய்ச்சல்  ஏற்படுகிறது.  இந்த காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலி இருக்கும். இந்த கிருமி  தொற்று ஏற்பட்டவர் இருமும் போது அல்லது தும்மும் போது இது பரவுகிறது. மேலும் இந்த வைரஸ் கிருமிகள் தரைபரப்பு, கதவு மற்றும் மேஜைகள்  போன்ற பரப்புகளில் பல மணி நேரம் உயிருடன் இருக்கும். இதன் மூலமும் இந்த காய்ச்சல் பரவி வருகிறது. கொரோனா, பறவை, பன்றி, வைரஸ்  உள்ளிட்ட அனைத்து காய்ச்சலுக்கு சளி,இருமல், தும்மல், தலைவலி உள்ளிட்டவைகள் முக்கிய அறிகுறிகள் ஆகும். எனவே பறவை,பன்றி மற்றும்  வைரஸ் காய்ச்சல் உள்ள தங்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக பீதி அடைந்துவருகின்றனர்.

இதை தடுக்க குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா தமிழகத்தில் இல்லை என்ற ெமத்தன போக்குடன் தமிழக  அரசு செயல்படாமல் பறவை மற்றும் பன்றி காய்ச்சலை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும்   பொதுமக்களிடம் காய்ச்சல் தொடர்பாக நிலவும் அச்சத்ைத போக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் கொரோனா வைரஸ் பீதியால் மளிகைக்கடைகள், மருந்துக் கடைகளில் பல மருத்துவ பொருட்கள் காலியாகி வருகின்றன. பலர், பயத்திலும்,  வதந்தியாலும் மருத்துவ பொருட்களை வாங்கி சேமிக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக சோப்பு, கை கழுவும் பொருட்கள், காய்ச்சல், சளி,  இருமலுக்கான மருந்துகள் காலியாகி வருகின்றன.

தொற்றுநோய் பட்டியலில் கொரோனா வைரஸ் தமிழக அரசு அறிவிப்பு

தொற்றுநோய் பட்டியலில் கொரோனா வைரஸ் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள  அரசாணையில் கூறி இருப்பதாவது:கொரோனா வைரஸ், சீனாவில் தொடங்கி இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா  வைரசை பெரும் தொற்றுநோய் என உலக  சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசும் கொரோனா வைரசை பேரிடராக அறிவித்து இருக்கிறது. இந்தநிலையில் தமிழக அரசும் கொரோனா  வைரசை தொற்றுநோய் பட்டியலில் இணைத்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று வெளியிட்டுள்ள அரசிதழில் கூறி இருப்பதாவது:தமிழக அரசியலமைப்பு  சட்டத்தின் 62வது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, கொரோனா வைரஸ் (கோவிட்-19) என்பது, தமிழக பொது சுகாதார சட்டம் 1939ன் கீழ்  அறிவிக்கப்பட்ட தொற்றுநோய் என கவர்னர் வழியாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மூளை காய்ச்சல், மலேரியா, தட்டம்மை, பெரியம்மை, ரேபிஸ், பிளேக், தொழுநோய்  காசநோய், டெட்டனஸ், எய்ட்ஸ், டைபாய்டு உள்ளிட்ட 21  நோய்கள் தமிழக பொது  சுகாதார திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட தொற்றுநோய்கள் பட்டியலில்  இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: