பஞ்சாப், அரியானாவில் விவசாயிகள் கவலை தொடர் மழையினால் பயிர்கள் நாசம்

சண்டிகர்: பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதுமை பயிர்கள் நீரில் மூழ்கி  நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இரு மாநில விவசாயிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலாவிலும் அரியானாவில் உள்ள பஞ்சகுலா, அம்பாலா, கர்னால் மாவட்டங்களில் கடந்த  வெள்ளிக்கிழமை முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் வெப்பநிலை 5 டிகிரி வரை குறைந்து, அதிகபட்சமாக 21 முதல் 24 டிகிரி செல்சியசாக நிலை கொண்டுள்ளது. பஞ்சாபில்  பஜில்கா, அரியானாவில் யமுனாநகர், கர்னால், குருஷேத்ரா மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

எதிர்பாராத இந்த கனமழையினால் கோதுமை விளைநிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென்று சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர்  சிங் பாதல் அரசை வலியுறுத்தியுள்ளார்.இதற்கிடையே, டெல்லியிலும் நேற்று காலை கனமழை கொட்டித்தீர்த்தது.

Related Stories: