கொரோனா தாக்குதல் எண்ணிக்கை 85 ஆக உயர்வு: பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு...தேவையான நிதி வழங்க மாநில அரசுக்கு அறிவுரை

புதுடெல்லி: சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் 17, கேரளா 17, மகாராஷ்டிரா 19, உத்தரபிரதேசம் 11, டெல்லி 6, ஆந்திரா 4, கர்நாடகா 4, லடாக் 3, காஷ்மீர் 1, பஞ்சாப் 1 ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மேலும் பீதியை அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உபி, பீகார், ஒடிசா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர், மால்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் பக்தர்கள் பரிசோதனைக்குப் பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பை பேரிடராக கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில பேரிடர் அமைப்பின் மூலம் தேவையான நிதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories: