வத்திராயிருப்பில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி திணறும் வாகனங்கள்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நகரில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால் அன்றாடம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகனங்கள் தவிக்கின்றன. வத்திராயிருப்பு நகரில் நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான வாகனங்களால் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வத்திராயிருப்பு நகருக்குள் பஸ்கள் செல்லாமல் புறவழிச்சாலை அமைத்து புறவழிச்சாலை மூலம் பஸ்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக வத்திராயிருப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

வத்திராயிருப்பு நகரில் உள்ள முத்தாலம்மன் திடல் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் பலர் சாலை வரை ஆக்கிரமித்து கடைகள் போட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் ஒன்றையொன்று உரசி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடைகள் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், பஸ் ஏற காத்திருக்கும் மாணவ, மாணவியர் சாலைகள் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அவலநிலை உள்ளது.

மேலும் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களின் போது வௌியூர்களில் இருந்து அதிகளவு வாகனங்கள் வரும் போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுப்பதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அத்துடன் இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் மூலம் நெருக்கடியை குறைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: