எனது விடுதலைக்காக போராடிய அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி..நான் சுதந்திரமாக உள்ளதாக இப்போது உணர்கிறேன்: ஃபரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது பிரிவை நீக்கி, இரு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு பிரித்தது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் கலந்த விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.

சுமார் 7 மாதங்களாக வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவலை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து சுமார் 7 மாத வீட்டு சிறைக்கு பின்னர் ஃபரூக் அப்துல்லா விடுதலையாகியுள்ளார். இந்நிலையில் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் பேசிய ஃபரூக் அப்துல்லா, எனது விடுதலைக்காக போராடிய அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி. எங்கள் சுதந்திரத்திற்காக பேசிய மாநில மக்களுக்கும், நாட்டின் பிற தலைவர்கள் மற்றும் மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

நான் சுதந்திரமாக உள்ளதாக இப்போது உணர்கிறேன். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மற்ற தலைவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர்தான் எனது அரசியல் எதிர்காலம் தொடர்பான முடிவை எடுப்பேன், என தெரிவித்துள்ளார். முன்னதாக, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் 3 பேர் உள்பட ஜம்மு-காஷ்மீர் அரசியல்வாதிகளை விடுவிக்க கோரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேவகவுடா உள்ளிட்ட 8 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: