மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் திவால் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது

புதுடெல்லி: திவால் நடவடிக்கை சட்டத்தின் நான்காம் திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.திவால் நிறுவனத்தின் மீதான சட்ட நடவடிக்கைகள் எதுவும், அதை ஏலத்தில் வாங்கும்  நிறுவனத்தை பாதிக்காமல், சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் திவால் சட்டத்தில்  ஏற்கனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மசோதா கடந்த 6ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில்,  திவால் சட்ட நடவடிக்கைகளை மேலும் எளிதாக்கும் வகையில் அதில் நேற்று  திருத்தம்  மேற்கொள்ளப்பட்டது. இது மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம்  நிறைவேற்றப்பட்டது. அப்போது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: திவால் சட்டத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொள்ளும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்தது. இது  திவால் சட்டத்தின் நான்காவது திருத்த மசோதாவாகும்.

உச்ச நீதிமன்ற  அறிவுறுத்தலின்படி, உரிய நேரத்தில் இந்த திருத்தங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. திவால் நடவடிக்கை சட்டத்தில் தேவைக்கேற்ற  மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு அதன் பொறுப்பை உணர்ந்து தொழில்  முனைவோர், தொழில் நிறுவனங்களுடன் இது தொடர்பாக அரசு பல முறை ஆலோசனை  மேற்கொண்டது.

வீடு வாங்குவோரின் தேவைகளையும் விருப்பங்களையும்  நினைவில் கொண்டு அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் திவால்  சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பதுடன், புதிய விதிகளும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: