திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஏப்ரல் 9க்குள் தெரிவிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஏப்ரல் 9ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்த எஸ்.கிருபாகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலின் ராஜகோபுரம் ரூ37.50 லட்சம் செலவில் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. நீண்ட காலமாக பராமரிக்கப்படாததால் ராஜகோபுரத்தின் வர்ணங்கள் மறைந்தும், கோபுரத்தில் விரிசலும் விழுந்து சேதமடைய வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் கார்த்திகேயன், ‘இந்த கோயில் கும்பாபிஷேகம் நடத்த மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களின் ஒப்புதல் பெறப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள தொல்லியல் குழுவிடம் ஒப்புதல் பெறவேண்டும். இந்த குழுவின் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

அப்போது ஒப்புதல் பெறப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் அதற்குள் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான முடிவை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: