சென்னையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

சென்னை: சென்னையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 4ம் தேதி நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அச்சமயம் அன்புச்செழியன் வீட்டில் இருந்து ரூபாய் 76 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் இருக்கும் போதே அவரை அழைத்து வந்து சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக சாலிகிராமத்தில் இருக்கும் அவரது அலுவலகத்தில் விசாரணையும், சோதனையும் நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில ஆவணங்களை அங்கு சீல் வைத்து, தொடர்ந்து அவை விசாரணைக்கு உட்படுத்தப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எல்லாம் சம்மன் அனுப்பி விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்த வருமானவரித்துறை சோதனையின் தொடர்ச்சியாக, விசாரணை என்பது ஒவ்வொருவரிடமும் நடைபெற்று வருகிறது.

அந்த அடிப்படையில் நடிகர் விஜய் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சோதனை செய்து பார்க்கும் போது மாஸ்டர் படப்பிடிப்பிற்காக இணை தயாரிப்பாளர் லலித் குமார் என்பவரிடமிருந்து பணம் பெற்று, அது தொடர்பான ஆவணங்கள் கிடைத்ததாகவும் தகவல் வெளிவந்தது. இது தொடர்பாக விசாரிப்பதற்காக நேற்று இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தற்போது பிகில் திரைப்படத்தின் வருமானவரித்துறை சோதனை தொடர்பாகவும், நடிகர் விஜய் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் தொடரப்படும் விசாரணையானது நடிகர் விஜய் வீட்டில் பனையூர் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. 8க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 3 வாகனங்களில் சென்று ஆவணங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதில் பல்வேறு பண பரிவர்த்தனை தொடர்பாகவும், அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விசாரணையானது ஏற்கனவே நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையின் தொடர்ச்சியாகும். இந்த விசாரணையின் முடிவில் வருமான வரித்துறையின் சந்தேகங்களை அவர்கள் தரப்பில் இருந்து கேட்கப்படுவதாகவும், அதற்காக விஜய்-யின் ஆடிட்டர்கள் பதிலளிக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சோதனை இன்று முழுவதும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: