கந்திலியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் டார்ச்லைட் வெளிச்சத்தில் படிக்கும் அவலம்

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஊராட்சியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் இரண்டு மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு  வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கந்திலி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் இரவு நேரத்தில் 11 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோடை வெயிலின் தாக்கத்தில் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவித்து வந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் மின்சாரம் குறைவாக உள்ளதால் (லோட் செட்டிங்) செய்வதாக தெரிவித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் கந்திலி பகுதியிலுள்ள கந்திலி, கும்மிடிக்கான்பட்டி, சின்னூர், கரகப்பட்டி, தோக்கியம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறிவிக்கப்படாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் இரவு 9 மணி ஆகியும் மின் இணைப்பு தரவில்லை.இதுகுறித்து பொதுமக்கள் கரியம்பட்டி துணை மின் நிலையத்திற்கு தொடர்புகொண்டு கேட்டால் அவர்கள் அலட்சியமாகவும், எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. காலையிலிருந்து இரவு வரை அறிவிக்கப்படாமல் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், மேலும் பொதுமக்கள் கோடை வெயிலில் இருந்து வெக்கை தாங்க முடியாமல் பெரும் அவதிப்பட்டனர்.

தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்று வருவதால் இரவு நேரத்தில் மாணவர்கள் இருள் சூழ்ந்த நிலையில் படிக்க முடியாமல் செல்போன் டார்ச் லைட்களையும் பேட்டரி லைட்டுகளையும் பயன்படுத்தி படித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மின்மிகை மாவட்டம் என அறிவித்துள்ள நிலையில் தற்போது கோடை தொடங்கியது முதல் அறிவிக்கப்படாத மின்வெட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் நலன் கருதி திருப்பத்தூர் பகுதியில் 24 மணி நேரம் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: