ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 7,000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்தாகுமா? பேரவையில் இன்று பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கை

இன்று பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 7 ஆயிரம் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்தாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக அளவில் கடந்த ஆண்டு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்து பங்கேற்ற போராட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக போராடிய 2,200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 1,111 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பள்ளிகளுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது 17பி, 17பி பிரிவுகளில் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. தங்கள் அடிப்படை உரிமைக்காக அறவழியில் போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் இன்னமும் திரும்ப பெறப்படவில்லை. இதன் காரணமாக கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொண்ட துறைரீதியான நடவடிக்கையின் காரணமாக ஆசிரியர்கள் தங்களுக்கான முன்னுரிமை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் யாருக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவது தொடர்பாகவும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அறிவிப்பு இன்று நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் வெளியிடப்படுமா? என அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

* சம்பிரதாய நீட் பயிற்சியால் ஜொலிக்காத மாணவர்கள்

தமிழக அரசால் நடத்தப்படுகின்ற நீட், ஜெ.இ.இ பயிற்சி மையங்கள் பெயரளவிற்கு நடைபெறும் பயிற்சி மையங்களாக மாறியுள்ளதால் வரும் காலங்களில் தனி ஆசிரியர் குழுக்களை அமைத்து நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் 412 மையங்களில் நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்டத்திற்கு 300க்கும் மேற்பட்டவர்கள் வீதம் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தனர். தமிழிலும், ஆங்கிலத்திலும் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

மருத்துவ படிப்புக்கு நீட் கட்டாயம் என்றாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் கடந்த காலங்களில் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட நீட் பயிற்சி வகுப்புகள் மாணவர்களை மருத்துவ படிப்புக்கு அழைத்து செல்லும் வகையில் சிறப்பிடம் பிடிக்கவில்லை. ஆண்டு முழுவதும் பயிற்சி அளித்தும் அது மாணவர்களுக்கு பலனை கொடுக்கவில்லை. சம்பிரதாயத்திற்கு நடத்தப்படுகின்ற பயிற்சி வகுப்பாகவே அமைந்தது. அதுவே நடப்பு கல்வியாண்டிலும் தொடக்கம் முதலே தொடர்ந்தது. இதற்காக தனியாக ஆசிரியர்களை கொண்ட பயிற்சி குழுக்களை ஏற்படுத்தி, அதற்கான கருவிகளையும், புத்தகங்களையும், உரிய வழிகாட்டுதல் பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories: