சிஏஏ-க்கு எதிராக சென்னை மண்ணடியில் தொடரும் போராட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு

சென்னை: சென்னை மண்ணடியில் சிஏஏ-க்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். மண்ணடி போராட்டக் களத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ம் தேதி நடந்த போராட்டத்தின்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீஸார் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக முஸ்லிம் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

மேலும், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த முஸ்லிம் அமைப்புகள், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை மண்ணடியில், இஸ்லாமியர்கள் இரவும் தொடர்ச்சியாக தர்ணா நடத்தி வருகிறார்கள். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கணிசமாக பங்கேற்றுள்ளனர். மேலும் இன்று தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்து எதிராக திமுக வாக்களித்தது. மாநிலங்களவையில் அதிமுக ஆதரவுடன் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேறியது. அதிமுக சிஏஏவை எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் நிறைவேறி இருக்காது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிஏஏ-க்கு எதிராக முதல்முதலில் தமிழகத்தில் தான் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டுள்ளது. சிஏஏ-க்கு எதிராக திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 2 கோடி பேர் கையெழுத்திட்டனர்.

Related Stories: