கடலாடியில் விவசாய நிலங்களை குத்தகை எடுத்து சூரியசக்தி மின் உற்பத்தி செயல்படுத்தப்படும்: அமைச்சர் தங்கமணி

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து சூரிய தகடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை விரைவில் தொடங்கவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, கர்நாடகாவில் 20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சோலார் தகடுகள் மூலம் அம்மாநில அரசு மின்சாரம் தயாரித்து வருவதாக கூறினார். தமிழகத்தில் கடலாடியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சோலார் மின்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, கடலாடி சோலார் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிலர் தடையாணை பெற்றிருந்ததாக கூறினார். இதனால் திட்டத்தை தொடங்க தாமதமானதால், கால அவகாசம் முடிந்துவிட்டதாக கூறி மத்திய அரசு ரத்து செய்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

தற்போது இந்த திட்டத்திற்கு மாற்றாக கடலாடியில் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து, சோலார் தகடுகள் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் தங்கமணி இவ்வாறு பதில் அளித்துள்ளார். முன்னதாக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: