அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ அமைப்பை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்த மார்ச் 29ம் தேதி முதல் மே 24 வரை நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு தடைக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பலரை தாக்கியுள்ளது.

தமிழகத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவிலும் பலருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது. உலகத்தையே இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வருடம் வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து அச்சறுத்தி வருவதால் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 1,22,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளது.

இதன் காரணமாக 150 ஆண்டுகால பழமையான இத்தாலி கால்பந்து லீக் போட்டிகள் உட்பட 10-ற்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மார்ச் 29-ம் தேதி தொடங்கி மே 4-ம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண மைதானங்களில் 30,000 முதல் 50,000 ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்களில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், அது மற்றவர்களுக்கும் வேகமாக பரவும் அபாயம் இருப்பதால் ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: