பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு ரஜினிகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட கோரி, திராவிடர் விடுதலை கழகத்தினர் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் துக்ளக் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பெரியார் பற்றி பேசினார். இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக கூறி, அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி திருவல்லிக்கேணி போலீசில் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் அளித்தனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது, இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில், தங்கள் புகாரின் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை எழும்பூர் 2-வது நீதிமன்றத்தில் நீதிபதி ரோசிலின் துரை முன்பு நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார், அதில் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153ஏ, 505,504 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையில் முகாந்திரம் இல்லை, மேலும் அவர் பேசிய கருத்தை அவதூறாக மனுதாரர் கருதினால், கிரிமினல் அவதூறு வழக்கை தனி நபர் வழக்காக மனுதாரர் தொடரலாம். எனவே நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: