மத்தியப் பிரதேச அரசியலில் திருப்பம்: காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டெல்லி: மத்திய பிரதேச காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பிரதமர் மோடியை சாத்தித்து பேசி வருகிறார். மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜ.வுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளர் சிந்தியாவை நிறுத்த பல எம்எல்ஏக்களும் விரும்பினர். ஆனால், சீனியர் தலைவர் என்பதால் கமல்நாத்துக்கு மீண்டும் முதல்வர் பதவியை மேலிடம் அளித்தது. இதனால் சிந்தியா அதிருப்தி அடைந்தார்.

சில நாட்களுக்கு முன்பு கமல்நாத் ஆட்சிக்கு சிக்கல் ஆரம்பித்தது. கமல்நாத் அரசுக்கு ஆதரவளித்த பிற கட்சி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாயினர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சில் பாஜ ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை பா.ஜ மறுத்தது. எனினும், மாயமான எம்எல்ஏக்கள் சிலர் போபால் திரும்பினர். இந்த நிலையில், ம.பி அமைச்சர் 6 பேர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர், தனி விமானத்தில் மீண்டும் பெங்களூரூ சென்றுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அம்மாநில அமைச்சர் கமல்நாத் நேற்று சந்தித்து அவரச ஆலோசனை நடத்தினார்.

இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பின்னர், மாநிலம் மாநிலத்திற்கு திரும்பிய கமல்நாத், தனது இல்லத்தில் நேற்றிரவு 9.00 மணிக்கு அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டினார். அதில் 20 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதே சமயம் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தியும் நேற்றிரவு 10.00 மணிக்கு பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். நள்ளிரவு வரை அவர்கள் ஆலோசித்தனர். அதே வேளையில், டெல்லியில் பாஜ தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவசர ஆலோசனை நடத்தினார்.

மேலும், மாநில பாஜ எம்எல்ஏக்கள் அனைவரையும் போபால் வரும்படி மாஜி முதல்வர் ஷிவ்ராஜ் சிங் உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் நேற்றிரவு வந்தனர். இதனிடையே, கமல்நாத் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் 16 பேரும், பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கமல்நாத்திடம் கூறினர். அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும்  முதல்வர் கமல்நாத்தை அவர்கள் வலியுறுத்தி தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இதனிடையே இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் இருந்துள்ளார். பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஜோதிர் ஆதித்யா சிந்தியா பாஜவில் இணையலாம் எனத்தகவல்கள் கூறுகின்றன. ம.பி. முதல்வர் கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: