யானைகள் நுழைவதை தடுக்க 20 கி.மீ தூரம் அகழி அமைக்க ரூ1 கோடி கேட்டு அரசுக்கு அறிக்கை: வனத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: குடியாத்தம்-பேரணாம்பட்டில் யானைகள் நுழைவதை தடுக்கும் வகையில் 20 கிமீ தூரம் அகழி அமைக்க ரூ1 கோடி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக-ஆந்திர எல்லையான ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதை வனத்துறை அதிகாரிகள் விரட்டினாலும் மீண்டும், மீண்டும் அவை வந்து விடுகின்றன. கடந்த 30 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம் போன்ற பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து பயிர்களை சேப்படுத்தி வருகின்றன.

இதை வனத்துறை ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து காட்டுப்பகுதிக்கு விரட்டுகின்றனர். ஆனால் காட்டில் தங்காமல் யானைகள் மீண்டும் வேறு வேறு கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது. தற்போது இருபிரிவுகளாக பிரிந்துள்ள யானை கூட்டம் பேரணாம்பட்டு அடுத்த சைனகுண்டா காட்டுப்பகுதி மற்றும் காட்பாடி அடுத்த பள்ளத்தூர், ராமாபுரம் ஆகிய கிராமங்களில் முகாமிட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முகாமிட்டுள்ள இந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும் முழுமையாக விரட்ட முடியவில்லை.

இதற்கிடையில், யானை வழித்தடங்களில் அகழி அமைப்பதற்கு அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம்- பேரணாம்பட்டு பகுதிகளில் யானைகள் வந்து செல்லும் வழித்தடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 20 கிமீ தூரத்திற்கு அகழி வெட்டுவதற்கு ரூ1 கோடி நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி மற்றும் நிதி கிடைத்ததும் அகழி வெட்டும் பணி மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அகழியை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்’ என்றனர்.

Related Stories: