வணிக நோக்கத்திற்கு உறிஞ்சுவதன் காரணமாக 32 மாவட்டங்களில் நிலத்தடி நீர் சரிவு: கடுமையான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சென்னை: வணிக நோக்கத்திற்கு உறிஞ்சுவதன் காரணமாக தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ள வருவது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் நிலத்தடி நீர் சட்டவிரோதமாக  திருடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் சட்ட விரோதமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, நிலத்தடி நீர்  மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக மழை பெய்தது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் சராசரி அளவில் இருந்தது. இந்த நிலையில் நிலத்தடி நீர்  பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக கடந்த ஜனவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்ட்டது.  தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது.இவ்வாறு கடந்த மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகம் முழுவதும் சென்னை, திருவள்ளூர் உட்பட 32 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம்  குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் சரிந்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்ததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் அதிக அளவில் பயன்படுத்துவதை தடுக்க நிலத்தடி நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: