யெஸ் வங்கி திவால் எதிரொலியால் ஒருநாள் முழுவதும் முடங்கியது ‘போன் பே’

* போன் பே நிறுவனம் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 2 கோடி பணப் பரிவர்த்தனைகளை மக்கள் செய்கின்றனர். யெஸ் வங்கி பிரச்னையால் சுமார் 40 சதவீதம் அளவிற்கு பணப் பரிவர்த்தனை முடங்கிவிட்டது. ஆனால், ஒரே நாளில் பிரச்னைக்கு தீர்வு கண்டுவிட்டதாக போன் பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரூ: தனியார் வங்கிகளில் மிகப் பெரிய ஒன்றான யெஸ் வங்கி, வாராக்கடன் பிரச்னையில் சிக்கி செயல்பட முடியாமல் முடங்கிவிட்டது. இந்த வங்கியின் பிரச்னை தற்போது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களையும் பாதித்துள்ளது. இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனையில் யெஸ் வங்கியுடன் இணைந்து செயல்பட்ட போன் பே நிறுவனம் முற்றிலும் முடங்கிவிட்டது. இந்த பாதிப்பு ஒரு நாள் மட்டும் நீடித்தது. அதன் பின்னர் பிரச்னை தீர்ந்து இயல்பு நிலை திரும்பிவிட்டதாக நேற்று காலை ட்விட்டரில் போன் பே நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் மிகப் பெரிய பேமெண்ட் நிறுவனங்களில் ஒன்று போன் பே. இந்த நிறுவனத்தின் அப்ளிகேஷன் வழியாக பரிமாற்றம் செய்யப்படும் பணம் அனைத்துமே, யெஸ் வங்கியை நம்பித்தான் உள்ளது.  தற்போது, போன் பே நிறுவனத்தின் செயலியைப் பயன்படுத்துபவர்கள் எல்லாம் தங்கள் பணப் பரிமாற்றங்களைச் செய்ய முடியாமல் ஒரு நாள் முழுவதும் தவித்துவிட்டனர். ஒரு மாதத்திற்கு அதிக அளவில் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், போன் பே நிறுவனத்தின் பணப் பரிமாற்றங்களும் க்ளியர் ஆகாமல் தேங்கி நிற்கிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த போன் பே வாடிக்கையாளர்கள் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவர்களுக்கு பதில் தரும் விதத்தில் போன் பே நிறுவனம் ஒரு ட்விட் செய்து உள்ளது. அதில், நாங்கள் ஒரு திட்டமிடாத பராமரிப்பு வேலையைச் செய்து கொண்டு இருக்கிறோம். இந்த பராமரிப்பு பணிகளினால், உங்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். விரைவில் எங்கள் சேவை தொடங்கும் என போன் பே நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலையில் போன் பே நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் பணப் பரிவர்த்தனை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளது.

Related Stories: