பில் தொகை செட்டில் செய்யாமல் இழுத்தடிப்பதால் திட்டப்பணிகளை நிறுத்தி வைத்து கான்ட்ராக்டர்கள் போர்க்கொடி: பொதுப்பணித்துறை வேலைகளை முடிப்பதில் சிக்கல்

சென்னை: பில் தொகை செட்டில் செய்யாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால் கான்ட்ராக்டர்கள் கட்டுமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு மூலம் புதிய அரசு கட்டிடங்கள் கட்டுதல், கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள், நீர்வளப்பிரிவு மூலம் ஏரி, அணைகளை புனரமைத்தல், புதிய அணைகட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் மூலம் பணிகள் நடக்கிறது. இப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒவ்வொரு காலகட்டங்களில் பில் தொகை பிரித்து வழங்கப்படுகிறது.

அதாவது, 25 சதவீதம், 50 சதவீதம், 75 சதவீதம், 100 சதவீதம் என்கிற அடிப்படையில் பணிகளை முடித்து அதற்கேற்ப பில் தொகை ஒப்பந்த நிறுவனங்களுக்கு தரப்படுகிறது. இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் பில் தொகை தொடர்பான ஆவணங்கள் சம்பள கணக்கு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு இந்த பில் தொகை விவரங்கள் சரி பார்க்கப்பட்டு, அங்குள்ள அதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே பில் தொகை ஒப்பந்த நிறுவனங்களுக்கு தரப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை முடிவதற்கே ஒன்றரை மாதங்கள் வரை ஆகி விடுவதாக கூறப்படுகிறது. இதனால், 25 சதவீதம் பணிகள் முடிந்தாலும், பில் தொகை செட்டில் செய்வதில் உள்ள தாமதம் காரணமாக, ஒப்பந்த நிறுவனங்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் நிறுத்தி வைப்பதாக கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்காமல் முடியாமல் பல நேரங்களில் தாமதம் ஆகி வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒப்பந்த நிறுவனங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் முதல்வரும் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு பில் தொகை உடனடியாக செட்டில் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

ஆனாலும், தற்போது வரை இப்பிரச்னை தொடர்வதால், ஒப்பந்த நிறுவனங்களும் பணம் கிடைத்தால் தான் பணிகளை முடிப்போம் என்று அப்படியே கிடப்பில் போடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், பில் தொகை செட்டில் செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால், ஒப்பந்த நிறுவனங்கள் பணிகளை நிறுத்தி வைத்து இருப்பதால்நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் முதல்வர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கான்ட்ராக்டர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: