பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிய கோவை அரசு மருத்துவமனையில் நவீன கருவி அறிமுகம்

கோவை: பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை கண்டறியும் நவீன கருவி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று அறிமுகம்  செய்யப்பட்டது. கோவை  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் எப்படி உள்ளது? என்பதை கண்டறிய  காதுகேட்கும் திறன் அறிதல் கருவி  வாங்கப்பட்டுள்ளது.  இதையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த அறிமுக விழாவில்  கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  டீன் அசோகன்  நவீன கருவியை  அறிமுகம்  செய்து தொடங்கிவைத்தார். அப்போது அவர்  கூறியதாவது:1000  குழந்தைகள் பிறந்தால் அதில் 2 அல்லது 3 குழந்தைகள் கேட்கும் திறன்  குறைபாடுடன் பிறக்கின்றன. சத்து குறைபாடு  காரணமாக குழந்தைகளுக்கு இந்த  பாதிப்பு ஏற்படும். 10 சதவீத குழந்தைகள் மட்டும் பரம்பரை ரீதியாக செவித்திறன் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.   சிறுவயதிலேயே இதை கண்டறிந்து  முறையான சிகிச்சை அளித்தால் அந்த குழந்தைகளும் செவித்திறன் பெற முடியும்.

இதற்காக  கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள்  மையத்தில் பிறந்த குழந்தைகளின்  செவித்திறனை கண்டறிய அரசு சார்பில்  காதுகேட்கும் திறன் அறிதல் என்ற நவீன கருவி வழங்கப்பட்டு உள்ளது. இதன்  மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.  இந்த கருவி செல்போன் போன்ற வடிவமைப்பை கொண்டது. இதில்  உள்ள ஒரு ஒயரை குழந்தையின் காதுக்குள் விட்டு சோதனை செய்வர். அதில்   பாஸ் என வந்தால் குழந்தையின் செவித்திறன் நன்றாக இருக்கிறது என்று  அர்த்தம். பெயில் என்று வந்தால் செவித்திறன் பாதிப்பு உள்ளது என்று   அர்த்தம். இந்த சோதனை செய்ய 2 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்த கருவியின்  மூலம் ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள்  பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்த அறிமுக விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் சடகோபன், குழந்தைகள் நல சிகிச்சை  பிரிவு துறை தலைவர் டாக்டர் பூமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: