நாகர்கோவில்: குமரியில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கும் பைக் ரேஸ் கட்டுப்படுத்த தனிப்படை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பைக் விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. 2017ல் 267 பேரும், 2018ம் ஆண்டு 221 பேரும் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மொத்தம் 1,421 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 193 விபத்துக்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் 211 பேர் பலியாகி உள்ளனர். அதிக விபத்து மரணங்கள் பைக் மூலம் நிகழ்ந்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதி வேகம் காரணமாகவும் விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்துக்கள் அதிகரிக்க குமரி மாவட்டத்தில் நடக்கும் பைக் ரேஸ் முக்கிய காரணம் ஆகும். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் மாலை மற்றும் இரவில் சூதாட்டம் போல் பந்தயத்திற்கு பணம் கட்டி திடீர், திடீரென பைக் ரேஸ் நடைபெறுகிறது. எந்தவித ஸ்பீட் பிரேக் இல்லாத சுமார் 10 கி.மீ. நீளமான சாலையை தான் பைக் ரேஸ் நடத்துவதற்கு தேர்வு செய்கிறார்கள். இந்த பைக் ரேசில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்களாக உள்ளனர். அதுமட்டுமில்லாமல் டாக்டர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களின் வாரிசுகள் அதிகளவில் ஈடுபடுகிறார்கள்.
இருவர் செல்லும் ரேஸ், ஒருவர் மட்டும் தனித்தனியாக செல்லும் ரேஸ் என பல பிரிவுகளாக இந்த ரேஸ் நடக்கிறது. இந்த சூதாட்ட ரேசில் ஈடுபடும் வாலிபர்கள் ஹாரன்களை அலற விட்டபடி பறக்கின்றனர். பைக் அதிவேகமாக செல்லும் போது சென்டர் ஸ்டேண்ட்டை சாலையில் படும்படி அழுத்தி தீப்பொறி பறக்கவிடுகின்றனர். இதனால் மேலும் உற்சாகம் அடையும் அந்த வாலிபர்கள் தீப்பொறி பறக்க சாலையில் பறக்கின்றனர். மாலை வேளைகளில் நடக்கும் இந்த பைக் ரேஸ் கண்டு பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைகிறார்கள். அதிகளவு பணம் மற்றும் விலை உயர்ந்த பைக்குகள பயன்படுத்துகின்றனர். காதல் ரோமியோக்கள் தங்களின் காதலியை கவர்வதற்காகவும், தான் ஒரு திறமையானவன் என்று மற்றவர்கள் கூற வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். அற்ப ஆசைக்காக தங்களின் விலைமதிப்பில்லா உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு வாலிபர்கள் துணிவது மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற செயல்களை காவல்துறையினர் சரியான முறையில் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மேம்பாலம், மார்த்தாண்டம் மேம்பாலம், சுவாமியார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பைக் ரேஸ் அரங்கேறுகிறது. இதே போல் கன்னியாகுமரி - அஞ்சுகிராமம் சாலையிலும் தினமும் பைக் ரேசுகள் நடக்கின்றன. இதே போல் நாகர்கோவில், மார்த்தாண்டம் போன்ற இடங்களில் நெருக்கடியான சாலையில் யார் அதி வேகமாக முந்துகிறார்கள் என்ற அடிப்படையில் ரேஸ் நடக்கிறது. பிறந்த நாள், பண்டிகைகள், புதிய பைக் வாங்குவது போன்ற காரணங்களுக்காக தங்கள் நண்பர்களுக்கு விருந்து வைப்பது உண்டு. இதில் மது விருந்தும் அடக்கம். இதுபோல் விருந்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள் நள்ளிரவுக்கு பின் போதையில் பைக் ரேஸ் செல்கிறார்கள். பைக்ரேசில் கலந்துகொண்ட மாணவர்கள், இளைஞர்கள் சிலர் விபத்தில் சிக்கி இறந்தும் உள்ளனர்.
இதே போல் சிக்னல் ரேசும் பிரபலமாகிறது. தற்போது பைக் நிறுவனங்கள் விற்கும் அதிக திறன் உடைய பைக்குகளை வாங்கி அதன்திறனை மேலும் அதிகரித்து அதிவேக பைக்குகளாக மாற்றுகின்றனர். அதிவேக பைக்குகள் வைத்திருக்கும் நண்பர்கள் குழுக்கள் சிக்னல்களை தங்கள் ரேஸ் ஸ்டார்ட்டிங் பாயின்டாக வைத்துக்கொள்கின்றனர். கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிக்குளம் சந்திப்பு, டெரிக் சந்திப்பு, செட்டிக்குளம், பீச்ரோடு உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நிற்கும்போது முன் வரிசையின் நிற்கின்றனர். பச்சை சிக்னல் காண்பித்ததும் வேகமெடுத்து 50 அல்லது 100 மீட்டர் தூரத்தை யார் முதலில் கடப்பது என்று பெட் கட்டி விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை கண்காணித்து காவல்துறை தடுப்பது என்பது சற்று கடினமான காரியமாக இருந்தாலும் கூட பொதுமக்களின் நலன் கருதி, இதில் அதிக அக்கறை காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. வெறும் ஹெல்மெட் சோதனையும், நோ பார்க்கிங் பைனும் விபத்துக்களை குறைக்க பயன்பட வில்லை. எனவே இது போன்ற பைக் ரேஸ் இளைஞர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தனிப்படைகள் அமைத்து கண்காணிக்க வேண்டும். அந்தந்த பகுதியில் யார், யார் பைக் ரேஸில் ஈடுபடுகிறார்கள் என்பது பற்றி நிச்சயம் அந்த பகுதி பொதுமக்களுக்கு தெரிய வாய்ப்பு உண்டு. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி, அவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.
