சபாநாயகர் மேசையில் ஆவணங்களை கிழித்து வீசிய 7 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை பங்கேற்க தடை: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கொந்தளிப்பு: பாஜ வரவேற்பு

புதுடெல்லி: சபாநாயகர் மேஜையில் இருந்த ஆவணங்களை எடுத்து கிழித்து வீசிய தமிழக எம்பி உட்பட 7 காங்கிரஸ் எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜ வரவேற்றுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் கட்ட கூட்டம், கடந்த 2்ம் தேதி தொடங்கியது. வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த மோதலில் 46 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி விவாதிக்க அனுமதி கோரி, முதல் நாளில் இருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், வரும் 11ம் தேதி ஹோலி பண்டிகைக்குப் பிறகு இது பற்றி விவாதிக்கலாம் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருக்கிறார். இதை ஏற்க மறுத்துள்ள எதிர்க்கட்சிகள், உடனடியாக விவாதிக்க வலியுறுத்தி அமளி செய்ததால், மக்களவையும், மாநிலங்களவையும் ஏற்கனவே 3 நாட்கள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நேற்றும் 4வது நாளாக இந்த அமளி நீடித்தது. நேற்று காலை மக்களவை கூடியதும், டெல்லி விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிளப்பின. அப்போது நடந்த அமளியின்போது சபாநாயகர் மேஜை மீது இருந்த சில ஆவணங்களை எடுத்து, காங்கிரஸ் எம்பி.க்கள் கிழித்து வீசினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த அமளி காரணமாக அடுத்தடுத்து 2 முறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை, பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த மீனாட்சி லெகி, அவை விதிமுறைகளை மீறியதற்காகவும், சபாநாயகர் மேஜையில்  இருந்த ஆவணங்களை கிழித்து வீசியதற்காகவும் காங்கிரஸ் எம்பி.க்கள் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தார். தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி.க்கள் கவுரவ் கோகய், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஷ், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், ராஜ்மோகன் உன்னிதன், பென்னி பேகனன் மற்றும் குர்ஜித் சிங் அஜ்லா ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். இதன் மூலம், இவர்கள் அனைவரும் இந்த பட்ஜெட் தொடர் முழுவதும் அவையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, 7 காங்கிரஸ் எம்பி.க்களை பட்ஜெட் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை அவையில் தாக்கல் செய்தார். இது  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள்  7 பேரையும் வெளியேற உத்தரவிட்ட மீனாட்சி லெகி, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

இந்த நடவடிக்கை பாஜ.வின் விருப்பப்படி எடுக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், இதை பாஜ வரவேற்றுள்ளது.  இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பேட்டியில், ‘`சபாநாயகர் மேஜையில் இருந்து ஆவணங்களை பறிப்பது என்பது சபாநாயகரை அவமதிக்கும் செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து அவையில் ஒழுக்ககேடான முறையில் நடந்து கொள்ளும் காங்கிரஸ் உறுப்பினர்களை கண்காணிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்,’’ என்றார்.

அவைக்கு வராத ஓம் பிர்லா

கடந்த 2ம் தேதியில் இருந்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் நடத்தும் அமளியால், சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். நேற்றைய கூட்டத்துக்கு அவர் வரவில்லை. அதற்கான காரணம் கூறப்படவில்லை. அவருக்கு பதிலாக பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த மூத்த உறுப்பினர் மத்டப் நடத்தினார். பின்னர், ராஜேந்திர அகர்வாலும், பின்னர் பாஜ.வை சேர்ந்த ரமாதேவியும் நடத்தினர். இறுதியாக அவையை நடத்தி மீனாட்சி லெகிதான், 7 காங்கிரஸ் எம்பி.க்களை சஸ்பெண்ட் செய்யும் உத்தரவை பிறப்பித்தார்.

சர்வாதிகார செயல் காங். குற்றச்சாட்டு

மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி அளித்த பேட்டியில், ‘‘ காங்கிரஸ் எம்பி.க்கள் 7 பேரை இந்த தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்துள்ள நடவடிக்கை, மத்திய அரசின் சர்வாதிகாரத்தை காட்டுகிறது. இது சபாநாயகரால் எடுக்கப்பட்ட முடிவல்ல; மத்திய அரசின் நடவடிக்கை. காங்கிரஸ் எம்பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளதின் மூலம், அவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் பலத்தை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. டெல்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு பயப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. 7 எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சரியா? என்பதை மக்களே முடிவு செய்யட்டும். நாங்கள் இதற்கு எல்லாம் பயப்பட மாட்டோம், தொடர்ந்து டெல்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்,’’ என்றார்.

Related Stories: