மதுரையில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது.. உள் தமிழக மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : நெல்லை,கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் உள் தமிழக மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் ஏனைய பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும். திண்டுக்கல், மதுரை, சேலம், நாமக்கல், கரூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகக் கூடும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் 9 செமீ மழையும், குமரி மாவட்டம் இரணியல் 5 செ.மீ. மழையும் கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிகோட்டையில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மதுரையில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸும் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: