ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை  அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள்  காப்பகம். இங்கு யானை, புலி,  சிறுத்தை, காட்டு மாடு, புள்ளிமான், வரையாடு  உள்ளிட்ட அரியவகை விலங்குகள் உள்ளன.அடர்ந்த  வனப்பகுதியாக உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், டாப்சிலிப், பொள்ளாச்சி  உள்ளிட்ட வனச்சரகங்களில் இயற்கையாக வழிந்தோடும்  நீரோடைகளில் தண்ணீர்  குடித்தும், இரை தேடும் வனவிலங்குகள் சுற்றித் திரிந்து வருகின்றன.இந்நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து  காணப்படுவதால், மேற்குத் தொடர்ச்சி மலைகளில்  மழைப்பொழிவு குறைந்து நீரோடைகள்  வற்றி வருகின்றன. இதனால் மரம், செடிகள் காய்ந்து எலும்புக்கூடுபோல் காட்சி  அளித்து வருகின்றது.  வறட்சி காரணமாக யானை, காட்டு மாடு, புள்ளிமான்  உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன எல்லையில் உள்ள கிராம   பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

வன விலங்குகளுக்காக வனப்பகுதிக்குள் கட்டப்பட்டிருந்த தடுப்பணைகளும் தற்போது தண்ணீரின்றி  உள்ளது. எனவே  வனவிலங்குகள்  நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும், வனப்பகுதியிலுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப  வேண்டும்  என்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து  வனப்பகுதியில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில்  டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நேற்று  தொடங்கியது. பொள்ளாச்சி  வனச்சரகத்தில் உள்ள போத்தமடை, ஆயிரம் கால், மாங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள  10க்கும் மேற்பட்ட தண்ணீர்  தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு  சென்று நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்  ஆழியார் - வால்பாறை கொண்டை ஊசி வளைவு பகுதியில் குரங்குகளுக்காக சிறிய  தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அங்கு தண்ணீர்  நிரப்பப்படும் என்றும்,  வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறாமல் இருக்க வேட்டைத் தடுப்பு  காவலர்கள் மூலம் கண்காணிப்பு பணி  தொடர்ந்து நடந்து வருவதாகவும்  வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: