ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்கா மரங்களில் ஓவியம்: பொதுமக்கள் வரவேற்பு

ஓசூர்: ஓசூர் ராமநாயக்கன் ஏரி சிறுவர் பூங்காவில் மரங்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், பொதுமக்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரில் 120 ஏக்கரில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் 4 ஏக்கரில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை ஓசூர் சப் கலெக்டராக இருந்த அசோக்வர்தன் ஷெட்டி திறந்து வைத்தார். இந்த பூங்கா பல ஆண்டுகள் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இதையடுத்து, தற்போதைய ஓசூர் மாநகராட்சி ஆணையாளரும், இணை இயக்குநருமான பாலசுப்ரமணியன், ராமநாயக்கன் ஏரி மற்றும் சிறுவர் பூங்காவை புதுப்பிக்க ₹29 கோடி நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கி வைத்தார். பணிகள் நடந்து வரும் நிலையில் ஏரி பூங்காவில் உள்ள மரங்களில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.

பூங்கா நுழைவு வாயிலில் இருபுறமும் உள்ள மரங்களில் பெண்கள் வணக்கம் தெரிவித்து பூங்காவுக்கு வருபவர்களை வரவேற்பது போல் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளை கவரும் வகையில் முயல், ஒட்டகம், அணில், குயில், ஆந்தை, கொக்கு, மான், யானை, சிங்கம் போன்ற ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. அதனால், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கடைகள் மற்றும் ஆவின் விற்பனை நிலையமும் திறக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ஓசூர் மாதிரி நகர திட்டத்தில், ராமநாயக்கன் ஏரி ₹29 கோடி நிதியில் புதுப்பிக்கப்பட உள்ளது.  இதில் ஒரு பகுதியாக பூங்காவில் உள்ள மரங்களில் வண்ண ஓவியங்களை வரைந்து வருகிறோம். இது பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றார்.

Related Stories: