வெள்ளநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க பாலாற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்

சென்னை: வெள்ளநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க பாலாற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், வெள்ளநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் உள்ளாவூர் (பழைய சீவரம்) கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை அமைக்கட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மழை காலங்களில் வெள்ளநீர் பாலாறு வழியாக வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், தமிழக பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில், மதுராந்தகம் வட்டத்துக்கு உட்பட்ட ஈசூர் வள்ளிபுரம், வாலாஜாபாத் வட்டத்துக்கு உட்பட்ட வெங்குடி, உள்ளாவூர், திருக்கழுக்குன்றம் வட்டத்துக்கு உட்பட்ட வாயலூர், செங்கல்பட்டு வட்டத்துக்கு உட்பட்ட பழவேலி, பாலூர், காஞ்சிபுரம் வட்டத்துக்கு உட்பட்ட வெங்கடாபுரம் ஆகிய இடங்களில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி முதல் கட்டமாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஈசூர் வள்ளிபுரம் கிராமத்தில் ரூ.30.95 கோடியிலும், திருக்கழுக்குன்றம் வட்டம் வயலூர் கிராமத்தில் ரூ.32.05 கோடியிலும் தடுப்பணை அமைத்து விவசாய மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் உள்ளாவூர் (பழைய சீவரம்) கிராமத்தில் ரூ.42.16 கோடியில் தடுப்பணை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: