சென்னை அண்ணா மேம்பாலம் அருகே பலத்த சத்தத்துடன் வெடித்த நாட்டுவெடிகுண்டால் பரபரப்பு: குண்டு வெடித்த இடத்தில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு

சென்னை: சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் உள்ள கார் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு 10 அடி தொலைவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தியதில் அது நாட்டு வெடிகுண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது ஜெமினி மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் எதிர்புறம் இருக்கும் நபர் மீது இந்த நாட்டு வெடிகுண்டை வீசிய காட்சி பதிவாகியுள்ளது. எதிரே உள்ள நபர்கள் மீது வீசிய அந்த வெடிகுண்டு அவர்கள் மீது படாமல் சாலையில் விழுந்து வெடித்தது தெரிய வந்தது. அந்த மர்ம நபர்கள் யார் மீது இந்த நாட்டு வெடிகுண்டை வீசினார்கள்? என்பது குறித்து தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசிட நபர்களை கைது செய்ய போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வெடிகுண்டு வெடித்த இடத்தில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்து வருகிறார். போக்குவரத்து அதிகமாக உள்ள அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வெடித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அமெரிக்க தூதரகம் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வெடித்ததால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: