மும்பை: நியூசிலாந்து சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி, டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தியது. ஆனால், அடுத்து ஆடிய ஆட்டங்களில் என்ன நடக்கப் போகிறது என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு இந்திய அணியின் பலவீனமான நிலையை ரசிகர்கள் கண்டனர். ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வெற்றிபெற்றவுடன், டெஸ்ட் தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி எப்படியும் ஜெயிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மூன்றே நாட்களுக்குள் தோல்வியைத் தழுவி ஏமாற்றியது. இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மிக மோசமாக இருந்தது. அதுவும், விராட் கோஹ்லியின் ஆட்டம் மோசத்திலும் மோசம். டெஸ்ட் தொடரில் அடித்த ரன்கள் 2, 19, 3, 14 என்ற எண்ணிக்கையில்தான் இருந்தது.
ஒருநாள் தொடரில் 51, 15, 9 என்ற ஸ்கோரை மட்டுமே மூன்று போட்டிகளிலும் எடுத்தார். டி20 தொடரில் நான்கு போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் 45, 11, 38, 11 மட்டுமே. மூன்றுவித போட்டிகளிலும் கேப்டன் சொதப்பிய நிலையில், அவர் மீது விமர்சனக் கற்கள் நாலா புறமும் வீசப்படுகின்றன. பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் அமைதியை இழந்த கோஹ்லி, நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது தனது நிதானத்தை இழந்து காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கோஹ்லி கூறுைகயில், ‘‘இந்திய அணி பெற்ற தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும். வெற்றி தோல்வியை வெறும் போட்டியின் முடிவாக மட்டும் பார்க்காமல், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்று ஆராய்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும்.
நியூசிலாந்து சூழ்நிலைக்கு இந்திய அணி தன்னைச் சரியாகத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை. மைதானத்தின் தன்மை, சூழல் போன்றவை தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. இந்திய அணி அடைந்த தோல்வி மனரீதியாக சில விளைவுகளை ஏற்படுத்தலாம். எதிர்மறையான எண்ணங்களை விடுத்து ஆக்கப்பூர்வமான பயணத்தை இந்திய அணி மேற்கொள்ளும்’’ என்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றதால், சாம்பியன்ஷிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியிடம் முதலிடத்தை பறிகொடுத்துள்ளது.அடுத்த ‘ஆட்டம்’ 12ம் தேதிஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் வருகிற 12ம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி லக்னோவில் வருகிற 15ம் தேதியும், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் வருகிற 18ம் தேதியும் நடக்கிறது. தென்னாப்பிரிக்காவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜ் லின்ட் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணியில், குயின்டான் டி காக் (கேப்டன்), தெம்பா பவுமா, வான்டெர் துஸ்சென், பாப் டுபிளிஸ்சிஸ், கைல் வெர்ரின், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ஜோன் ஸ்முட்ஸ், பெலக்வாயோ, நிகிடி, லுதோ சிபம்லா, பியூரன் ஹென்ரிக்ஸ், அன்ரிச் நோட்ஜே, ஜார்ஜ் லின்ட், கேசவ் மகராஜ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அணியில் ஒழுக்கமில்லைஇந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமணன், தனது சமூக வலைதளபக்கத்தில், ‘கோஹ்லி தலைமையிலான அணியினர் நீண்ட காலமாக அனைத்து பிரிவுகளிலும் ஒழுக்கமாக இல்லை. அதனால்தான் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தனர். கிறிஸ்ட்சர்ச், ஹாக்லே ஓவலில் நடந்த இரண்டாவது போட்டியின் போது, டாம் லாதம் மற்றும் டாம் ப்ளண்டெல் ஆகியோர் அரைசதம் அடிப்பதற்கு முன்பாக, டிரெண்ட் போல்ட் மற்றும் டிம் சவுதி ஆகியோர் இந்திய பவுலர்களை எளிதாக வீழ்த்தினர். கோஹ்லியின் மோசமான பேட்டிங் தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைய காரணம். இந்த சுற்றுப்பயணத்தில் 11 இன்னிங்ஸ்களில் 218 ரன்கள் எடுத்தார்; அதிகபட்ச ஸ்கோர் 51 ரன்கள்’ என்று தெரிவித்துள்ளார்.யாரும் கவலைபட வேண்டாம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறுகையில், ‘‘சர்வதேச அரங்கில் 70 சதங்களை விளாசியவரின் டெக்னிக் பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்புவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. சில நேரங்களில் வீரர்கள் சிறந்த பார்மில் இருக்கும்போது கூட ரன்களை சேர்க்க முடியாத நிலை ஏற்படலாம். பாகிஸ்தானின் முகமது யூசுப்பிற்கு இதேபோன்ற பிரச்னை வந்தது. இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சரியாக ஆடாத நிலையில் கோஹ்லியை மட்டும் விமர்சனம் செய்வது சரியல்ல. கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வி சகஜம். கோஹ்லியின் ஆட்டத்தைப் பற்றி யாரும் கவலைகொள்ள வேண்டாம். அவர் மன ரீதியாக மிகவும் வலிமையான வீரர். இன்னும் சில நாள்களிலேயே அவர் இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுப்பார்’’ என்றார்.‘பிரஷர்’ கொடுக்கறாங்க...விராட் கோஹ்லியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் ஷர்மா கூறுகையில், ‘‘நியூசிலாந்து தொடர் கோஹ்லிக்கு சரியாக அமையவில்லை. இந்திய அணி முழுக்க முழுக்க கோஹ்லியை மட்டுமே நம்பியுள்ளது. இதனால் அவர் அதிகளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். மற்ற வீரர்களும் பொறுப்பேற்று சிறப்பாக ஆட வேண்டும். நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சரியான திட்டமிடலுடன் சிறப்பாக பந்து வீசினர். ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் அனைத்து வீரர்களும் சரியான திட்டத்துடன் களமிறங்கி வெற்றி அடைந்தனர்’’ என்றார்.