கருங்கல்: கருங்கல் அருகே, கேரளாவில் இருந்து இறைச்சிக்கழிவு ஏற்றி வந்த லாரி மீது பொதுமக்கள் சரமாரியாக கல்வீசி தாக்கினர். கேரளாவில் பல பகுதிகளில் இருந்து இறைச்சி கழிவுகளை வாகனங்களில் ஏற்றி வந்து, குமரி மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான பல பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் கொட்டி செல்வது வழங்கமாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் நுர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள், நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.இந்த நிலையில் கேரள கோழிக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று காலை கருங்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியில் இருந்து சகித்த முடியாத துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக கருங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று கருங்கல் அருகே பாலூர் பகுதியில் வைத்து அந்த லாரியை மடக்கி பிடித்தனர்.
டிரைவரிடம் விசாரித்தபோது திருவனந்தபுரத்தில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றிக்கொண்டு அஞ்சுகிராமத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். ேமலும் லாரியை ஓட்டி வந்த திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்த டிரைவர் ரதீஷ்(37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இறைச்சி கழிவு லாரி பிடிபட்டது குறித்து போலீசார் கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த சுகாதாரத்துறையினர், விசாரணைக்கு பிறகு கழிவுகளை அங்குள்ள குளத்தின் கரையில் புதைக்க முடிவு செய்தனர். ஜேசிபி வரவழைக்கப்ப்டடு பள்ளம் தோண்டப்பட்டது. தகவல் அறிந்து வந்த திமுக வர்த்தகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சத்தியராஜ் உள்ளிட்டோர் அதிகாரிகள் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீர்நிலைகளுக்கு அருகில் கழிவுகளை புதைக்க அனுமதிக்க மாட்டோம். கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே அனுப்புங்கள் என தெரிவித்தனர். இதையடுத்து பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலைர் இறைச்சி கழிவு கொண்டு வந்த லாரி மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் லாரியின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அபராதம் செலுத்த மறுத்து அடாவடிவிசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், கிள்ளியூர் பேரூராட்சிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டனர். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என டிரைவர் மறுத்துவிட்டார். இதையடுத்து லாரி உரிமையாளரருக்கு போலீசார் போன் செய்து தகவல் தெரிவித்து உடனடியாக சம்பவ இடம் வருமாறு கூறினார். ஆனால் கேரளாவைச் சேர்ந்த அந்த நபர் உடனடியாக வரமுடியாது என அடாவடியாக பதில் கூறினார். இதனால் வேறு வழியின்றி போலீசார் லாரியை பாலூர் குளத்தின் அருகில் நிறுத்தி வைத்தனர். கடும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவ்வழியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதுமட்டுமின்றி அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது.