தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்: பாமக தேர்தல் சிறப்பு பொதுக்குழுவில் வலியுறுத்தல்

சென்னை: தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தேர்தல் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையை அடுத்த திருவேற்காட்டில் பாமக தேர்தல் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாமக நிறுவனர்  ராமதாஸ் தலைமை வகித்தார். இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் வரவேற்றுப் பேசினார். பொருளாளர் திலகபாமா தீர்மானங்களை வாசித்தார்.

இந்த தீர்மானத்தில் 4 வது தீர்மானம் என்.ஆர்.சி குறித்த தீர்மானம் என்பதால் அதனை  கசாலி என்பவர் 4 வது தீர்மானத்தை வாசிக்கும்படி ராமதாஸ் கூறியதையடுத்து அவர் வாசித்தார். இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்: 2021 சட்டபேரவை தேர்தலில் பா.ம.க அதிகார இலக்குகளை எட்ட பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வகுத்து தரும் பாதையில் உழைக்கவும், வெற்றி பெறவும் உறுதி ஏற்போம். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக பெற்று தந்த ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு பாராட்டுகள். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுக. காவிரி - கோதாவரி இணைப்பு திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாமக தயார்.

தமிழர் விடுதலையில் குழப்பத்தைப் போக்க ஆளுநர் உடனடியாக முடிவை அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் புதிய மதுக் கடைகளை திறக்கக் கூடாது. முழு மதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேலு, ஏ.கே.மூர்த்தி, கட்சி நிர்வாகிகள் கே.என்.சேகர், ஆலப்பாக்கம் டில்லிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: